முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் தீர்மானம்
முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
முஸ்லிம் பெண்களை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது அரசியல்சாசனத்துக்கு விரோதமானது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்காக புதிய அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவந்தது. இந்த அவசர சட்டம் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் தான் சட்டமாக மாறும். இதற்காக முத்தலாக் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.
இதில் முத்தலாக் மூலம் முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்வது செல்லாது என்றும், இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டமசோதா கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், அ.தி.மு.க. போன்ற நடுநிலையான கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் அங்கு பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்றினால் தான் சட்டமாக கொண்டுவர முடியும். மாநிலங்களவையில் நேற்று சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது உறுப்பினர்கள் தங்களது விவாதத்தை முன்வைக்கலாம் என்று அவை துணைத் தலைவர் அறிவித்தார். ஆனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு கோஷங்கள் போட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) குலாம்நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் ஆகியோர், முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். அவை முடங்கியது.
மசோதா மீதான விவாதம் நாளை புதன்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். இந்த தீர்மானம் நாளை எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குலாம் நபி ஆசாத் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், 11 நபர்கள் கொண்ட தேர்வுக்குழுவின் பெயரையும் பரிந்துரை செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, சமாஜ்வாடி தலைவர் ராம் கோபால் வர்மா, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் குமார் ஷா உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.