அணு உலைகள், கைதிகள் குறித்த தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட இந்தியா-பாகிஸ்தான்
அணு உலைகள், கைதிகள் குறித்த தகவல்களை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.
புதுடெல்லி/ இஸ்லமாபாத்,
இந்தியா- பாகிஸ்தான் இடையே பரஸ்பரம், தத்தமது நாடுகளில் உள்ள அணு உலைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக 1988- டிசம்பர் 31 ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 27- 1991 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதேபோல், கைதிகள் பற்றிய விவரங்களை பரிமாறிக்கொள்ள 2008-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது, முதல் ஆண்டு தோறும் இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாட்டில் உள்ள மாற்று நாட்டு கைதிகளின் எண்ணிக்கையையும், அணு உலைகள் குறித்த விவரங்களையும் பரிமாறி வருகின்றன.
அந்த வகையில், 28-வது முறையாக இந்த தகவல்களை இரு நாடுகளும் முறையாக பரிமாறிக்கொண்டன. அந்த வகையில், இந்திய சிறையில், பாகிஸ்தானைச்சேர்ந்த சாதாரண கைதிகள் 249 பேரும் 98 மீனவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அளித்த பட்டியலின் படி, அந்நாட்டு சிறையில், 483 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவைச்சேர்ந்த 54 பொது கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகம் வழியாக இரு நாடுகளும் இந்த தகவல்களை பரிமாறிக்கொண்டன.