காங்கிரஸ் தலைமை பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது, அமித்ஷாவிற்கு எதிராக சிபிஐயை பயன்படுத்தியது - பா.ஜனதா
காங்கிரஸ் தலைமை பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது, அமித்ஷாவிற்கு எதிராக சிபிஐயை பயன்படுத்தியது என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தில் நடந்த சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்து சிபிஐ கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சொராபுதினை யாரும் கொல்லவில்லை. அவர்கள் தாமாகவே இறந்து விட்டனர்” என்று கிண்டலாக கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, சொராபுதின் வழக்கில் தீர்ப்பை விட நீதிபதி கூறிய கருத்துதான் மிகவும் முக்கியமானது.
“ஆரம்பத்தில் இருந்தே உண்மையை வெளிக் கொணர முறையாக விசாரணை நடத்தாமல், அரசியல்வாதிகள் மீது திருப்பும் வகையிலேயே விசாரணை அமைப்பு நடந்து கொண்டது.” எனவே, சொராபுதினை கொன்றது யார்? என்று கேட்பதை விட சொராபுதின் வழக்கு விசாரணையை கொன்றது யார்? என்று ராகுல் காந்தி கேட்டிருக்க வேண்டும். அதற்கு சரியான பதில் கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இப்போது இவ்விவகாரத்தில் தன்னுடைய தாக்குதலை தொடர்ந்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் தலைமை பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது, அமித்ஷாவிற்கு எதிராக சிபிஐயை பயன்படுத்தியது என குற்றம் சாட்டியது.
பா.ஜனதா தலைவர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசுகையில், அரசியல் எதிரிகளை அழிக்க காங்கிரஸ் எந்த அளவிற்கும் செல்லும் என்பதற்கு சொராபுதின் வழக்கு உதாரணமாகும். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது அமித்ஷாவை இலக்காக சிபிஐயின் மூலம் சதித்திட்டம் தீட்டியது என கூறியுள்ளார். ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தது தொடர்பாக ஸ்மிருதி இராணி பேசுகையில், காங்கிரஸ் தலைமை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
“காங்கிரஸ் தலைமையின் உத்தரவின்படி சிபிஐயை அமித்ஷாவிற்கு எதிராக செயல்பட்டது, இது அரசியல் சதிதிட்டம். இவ்விவகாரத்தில் அரசியல் காரணத்திற்காக அமித்ஷாவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டும் தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு மட்டும் கிடையாது, சுப்ரீம் கோர்ட்டும் அதனை கூறியுள்ளது. காங்கிரசின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார் ஸ்மிருதி இராணி.