மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை: மேகதாது திட்டத்துக்கு காவிரி ஆணைய அனுமதி அவசியம் - தலைவர் தகவல்

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், இந்த திட்டத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் எனவும் ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறினார்.

Update: 2018-12-04 00:00 GMT
புதுடெல்லி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அணை திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மேகதாது அணை பிரச்சினைக்கு பிறகு நடைபெற்ற இந்த முதல் கூட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவருமான மசூத் உசேன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார், காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் ரா.சுப்பிரமணியம், துணைத்தலைவர் கே.எஸ்.ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங், கேரள நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணிகள் வளர்ச்சி ஆணையர் ஏ.அன்பரசு ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதி பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அந்த எதிர்ப்பை பதிவு செய்து கூறியதாவது:-

தமிழக அரசு தெரிவித்த நியாயமான மறுப்புகளை பரிசீலிக்காமலும், தமிழ்நாடு மற்றும் இதர படுகை மாநிலங்களின் அனுமதி பெறாமலும், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து இருப்பது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறும் செயலாகும்.

ஏற்கனவே கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி நீரை அளித்தும், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை குறைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், கர்நாடகாவில் புதிய அணை உருவானால், இயல்பான ஆண்டுகளில் கூட தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை பெற இயலாத சூழ்நிலை ஏற்படும்.

பெங்களூரு குடிநீர் தேவைக்காக நெட்கல் நீர்த்தேக்கத்தில் இருந்து ஏற்கனவே கர்நாடகம் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, குடிநீருக்காக மேகதாதுவில் அணை கட்ட அவசியம் ஏதும் இல்லை.

அப்படி அணை கட்டப்பட்டால் கிருஷ்ணராஜசாகர், கபினி மற்றும் பில்லிகுண்டுலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தற்போது தமிழ்நாட்டுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்துக் கொண்டிருக்கும் நீர் தடுத்து நிறுத்தப்படும். இதனால் மிக முக்கியமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் போய் விடும்.

பெங்களூருக்கு குடிநீர் வழங்குதல் என்ற போர்வையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தினால் நீர் தேக்கும் கொள்ளளவு அதிகரிப்பதோடு அந்த மாநிலத்தில் பாசனப்பரப்பை விரிவுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது காவிரி நடுவர் மன்ற ஆணையையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறும் செயலாகும்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக மக்களின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும். தமிழக விவசாயிகளின் நலன்களை பாதிப்பதாலும், தமிழ்நாடு இத்திட்டத்திற்கு மறுப்புகளை தெரிவித்துள்ளதாலும், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களின் முன் அனுமதியை பெறாததாலும், கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை வழுவாமல், முழுமையாக செயல்படுத்தும் பொறுப்பினை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. அதன்படி, மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடகத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய நீர்வள ஆணையம் உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

மேலும், காவிரி நீரையே நம்பியுள்ள பல லட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இதுபோன்ற மிகமுக்கியமான பிரச்சினைகளில் மத்திய நீர்வள ஆணையம் அவசரம் காட்டாமல், கீழ்ப்படுகை மாநிலங்களின் அனுமதியை பெற்ற பின்னரே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டம் முடிந்ததும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதை இப்போது கூற முடியாது. ஆணையத்தின் அடுத்த கூட்டம் ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மேகதாது பற்றி நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் தமிழகம் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை வாரியம் கருத்தில் கொண்டுள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.

கர்நாடக அரசின் அந்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்ற பிறகே தாக்கல் செய்ய முடியும்.

இவ்வாறு இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு, மற்ற மாநிலங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும் பெற வேண்டும்.

அந்த வகையில் மத்திய அரசு மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. வெறும் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்குதான் அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பான அனைத்து விஷயங்களும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு மசூத் உசேன் கூறினார்.

இதற்கிடையே மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு விரைவில் தாக்கல் செய்யும் என அந்த மாநில நீர்வளத்துறை மந்திரி சிவகுமார் நேற்று கூறினார்.

இது தொடர்பாக என்ஜினீயர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவினருடன் அணை கட்டுவதற்கான பகுதியை வருகிற 7-ந்தேதி தான் பார்வையிட செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்