விவசாயிகளுக்கு 24 மணிநேரம் இலவச மின்சாரம் வழங்குகிறீர்களா? மோடிக்கு சந்திரசேகர ராவ் கேள்வி

நான் பா.ஜ.க. அல்லது காங்கிரசின் ஏஜெண்டு அல்ல என்றும் மக்களின் ஏஜெண்டு என்றும் தெலுங்கானா முதல் மந்திரி கூறியுள்ளார்.

Update: 2018-12-03 13:29 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவில் வருகிற 7ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சூர்யபேட்டை நகரில் கோடட் என்ற பகுதியில் நடந்த பேரணி ஒன்றில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவர் மற்றும் தெலுங்கானாவின் முதல் மந்திரியான கே. சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்.) கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்பொழுது, சோனியா காந்தியின் ஏஜெண்டு நான் என பிரதமர் மோடி கூறுகிறார்.  ராகுல் காந்தி வந்து, மோடியின் பி அணியை சேர்ந்தவர் என கூறுகிறார்.  அப்படியெனில் நான் யாருடைய ஏஜெண்டு?  இந்த ஏஜெண்டுகள் என்ற கதை என்ன?

நான் ஒன்றை இங்கு ஒப்பு கொள்கிறேன்.  கே.சி.ஆர்., தெலுங்கானா மக்களின் ஏஜெண்டு.  வேறு யாருடைய ஏஜெண்டும் கிடையாது என கூறினார்.

நாட்டில் விவசாயிகளுக்கு 24 மணிநேரம் இலவச மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் தெலுங்கானா.  மோடிஜி, உங்களது அரசு 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.  இந்த மாநிலங்களிலுள்ள விவசாயிகளுக்கு 24 மணிநேரம் இலவச மின்சாரம் வழங்குகிறீர்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்