எத்தியோப்பியாவில் இந்திய பிணைக்கைதிகள் 2 பேர் விடுவிப்பு

எத்தியோப்பியாவில் இந்திய பிணைக்கைதிகள் 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2018-12-02 18:15 GMT
மும்பை,

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ‘இன்பிராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் பினான்சியல் சர்வீசஸ்’ என்ற இந்திய நிறுவனம் அந்நாட்டில் பல்வேறு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் திடீரென நலிந்து போனதால் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் எத்தியோப்பிய தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஒரோமியா மற்றும் அம்ஹாரா ஆகிய மாகாணங்களில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலாளர்கள் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டனர். தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் மட்டுமே அவர்களை விடுவோம் என்றும் கூறி வருகின்றனர்.

இதனிடையே இந்திய தொழிலாளர்கள் 7 பேரும் போதிய உணவு வழங்கப்படாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதில் ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டி என்னும் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். இருவரும் சிகிச்சைக்காக தலைநகர் அடிஸ் அபாபா நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் மற்ற 5 பேரும் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்