நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைவு
ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டின் ஜூலை- செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்த போதிலும், வளர்ச்சி வேகத்தில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
;நடப்பு (2018-19) நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜிடிபி) 8.2 சதவீதத்தை எட்டியிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜிடிபி இந்த அளவுக்கு உயர்ந்தது அதுவே முதல் முறை.
இந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, கடந்த மூன்று காலாண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். இருப்பினும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காணப்பட்ட ஜிடிபி வளர்ச்சியான 6.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகம். சீனாவுடன் ஒப்பிடும்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா முன்னிலையில் உள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் உள்நாட்டு உற்பத்தி திறனான ஜி.டி.பி. விகிதம் வெளியிடப்படும்.. ஜனவரி முதல் மார்ச் வரை முதல் காலாண்டாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை 2-வது காலாண்டாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை 3-வது காலாண்டாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 4-வது காலாண்டாகவும் கணக்கிடப்படுகிறது.