முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கக் கோரும் வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரும் வழக்கில், தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரசல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக் கோரும் கோரிக்கையை நிராகரித்து வழக்கின் மீதான விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டதாவது;–முல்லைபெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நிபுணர்கள் பலமுறை உறுதி செய்து இருக்கிறார்கள். ஆனால் மனுதாரரும் கேரளா அரசும் வேண்டும் என்றே அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அணையின் பாதுகாப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்து உள்ள தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்தி வருகின்றனர்.
மனுதாரர் மனுவில் அளித்துள்ள பல தகவல்கள் தவறானவை. கோர்ட்டை தவறாக வழிநடத்தும் தன்மை கொண்டவை. தண்ணீரின் அளவை 139 அடிக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நியாயமற்றது. இது கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அமைந்துள்ளது.
அணையில் தண்ணீரின் அளவை நிர்ணயித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு முகாந்திரம் எதுவும் கிடையாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு தமிழக அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.