சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச சுமார்ட் போன் அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச சுமார்ட் போன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் எனவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என காங்கிரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் ஒரு கோடி குடும்பங்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் சுமார்ட் போன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்வரும் குடும்பங்களுக்கு இந்த சுமார்ட் போன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ. 1,000 இரண்டு தவணையாக வழங்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தொலை தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களால் அமைக்கப்படும் சிறப்பு முகாம்களில் சுமார்ட் போன்களை வாங்குவதற்கு ரூ .500 வழங்கப்படும். போனை வாங்கிய பின்னர் இணையத்துடன் தங்கள் தொலைபேசியை இணைத்து, சம்பந்தப்பட்ட செயலியை பதிவிறக்கும்போது, இரண்டாவது தவணை ரூ. 500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் இந்த நகர்வை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.