பெட்ரோல் விலை விரைவில் ரூ.100-ஐ தொடும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து விலை உயர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால், பெட்ரோல் விலை விரைவில் ரூ.100-ஐ தொடும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu
அமராவதி,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. லிட்டர் ஒன்றிற்கு ரூ.83-ஐ நெருங்கியுள்ள நிலையில், பெட்ரோல் விலை விரைவில் ரூ.100-ஐ தொடும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,
பண மதிப்பிழப்பால் மத்திய அரசு என்ன சாதனை செய்துள்ளது? வங்கிகளின் நிலைமையை நாம் இன்று கண் கூட பார்க்கிறோம். அதிக மதிப்புள்ள பணத்தை கட்டாயம் ஒழிக்க வேண்டும். 2000 ரூபாய் நோட்டால் என்ன பயன்? மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாக நிர்வகிக்க தவறிவிட்டது. நாட்டின் பல பகுதிகளில் இன்னும் பண தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மக்களின் பலத்தையே காட்டுகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனை அல்ல. மோடி ஒரு திறனற்றவர். இன்றும் பல ஏடிஎம் களில் பண தட்டுபாடு நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு விரைவில் ரூ.100-ஐ எட்டும். அதே போல, பெட்ரோல் விலையும் ரூ.100-ஐ தொடும். மத்திய அரசு ஒழுங்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால், ஏன் ஊழல் நடக்கிறது? ஏன் வங்கிகள் திவாலாகின்றன? நேர்மை, உண்மை, ஒழுக்கம் குறித்து பேசுவதற்கு மோடி தகுதியற்றவர் எனக் கூறினார்.