கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

கர்நாடகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றி உள்ளது.

Update: 2018-09-03 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 2,632 வார்டுகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 9 ஆயிரத்து 121 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மூன்று மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மைசூரு மற்றும் துமகூரு ஆகிய 2 மாநகராட்சியில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

29 நகரசபைகளில் உள்ள 926 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 370 வார்டுகளிலும், காங்கிரஸ் 294 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 106 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் 10 வார்டுகளிலும், சுயேச்சைகள் 123 வார்டுகளிலும், பிற கட்சிகள் 23 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

மொத்தம் 2,662 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 929 வார்டுகளிலும், காங்கிரஸ் 982 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 375 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் 13 வார்டுகளிலும், சுயேச்சைகள் 329 வார்டுகளிலும், பிற கட்சிகள் 34 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதில் 30 வார்டுகளுக் கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த தேர்தலை பொறுத்த வரையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் ஏறத்தாழ சமஅளவில் வெற்றி பெற்றுள்ளன.

105 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 31-லும், பா.ஜனதா 27-லும், ஜனதாதளம் (எஸ்) 12-லும் வெற்றி வாகை சூடியுள்ளன. 35 உள்ளாட்சி அமைப்புகளில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது. இதில் சில உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கைப்பற்ற முடிவு செய்துள்ளது. சில உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜனதா கட்சி சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்து கைப்பற்ற முயற்சியில் இறங்கி உள்ளது.

மேலும் செய்திகள்