ஹர்திக் பட்டேல் 9-வது நாள் உண்ணாவிரதம் உடல் நிலை மோசமானதால் உயில் எழுதி வைத்தார்

9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஹர்திக் படேல், தன்னுடைய உடல்நிலை மோசமானதையடுத்து உயில் எழுதியுள்ளார். #HardikPatel

Update: 2018-09-03 12:07 GMT
மும்பை,

குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.

அந்த போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆகஸ்ட் 25-ம் தேதி  அந்த இயக்கத்தின் சார்பில் குஜராத்தில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

இதைதொடர்ந்து, அகமதாபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 3 மணியளவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஹர்திக் பட்டேல் தொடங்கினார்.

இந்தநிலையில்,  9 நாட்களாக, படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும் அவரது ரத்த அழுத்தம் சீராகவே உள்ளது என தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, தான் உயிரிழக்கும்பட்சத்தில் தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சென்று சேரவேண்டும் என்று ஹர்திக் உயில் எழுதியுள்ளார். 

அதன்படி, வங்கியில் உள்ள ரூ.50 ஆயிரத்தில் ரூ20 ஆயிரம் அவருடைய பெற்றோர்களுக்கும் மீதமுள்ள தொகை குஜராத்தில் தனது கிராமத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் பசுக்களின் வாழ்விடமான ‘பஞ்ச்ரபோல்’ இல்லத்திற்கு சேர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல,  ராயல்டி, இன்சூரன்ஸ் தொகை, அவருடைய காரை விற்று கிடைக்கும் தொகை ஆகியவற்றில், 15 சதவிகிதம் அவருடைய பெற்றோருக்கும், 15 சதவிகிதம் சகோதரிக்கும் மற்றும் மீதமுள்ள 70 சதவிகிதம் கடந்த 2015ல் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 14 படேல் சமூகத்து இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் சென்று சேர வேண்டும் என்று அவர் தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

மரணத்திற்கு பிறகு தனது கண்களை தானமாக ஹர்திக் பட்டேல் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.  ஆனால் அம்மாநில அரசு ஹர்திக் பட்டேல் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்த்திற்கு எந்தவித செவியும் சாய்க்கவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்