பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு: விஜய் மல்லையா பதிலளிக்க 3 வாரம் அவகாசம்
பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையா பதிலளிக்க 3 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.
இதற்கிடையே, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
தலைமறைவு பொருளாதார குற்றவாளி என அறிவிக்கக்கோரும் வழக்கில் தான் பதிலளிக்க அவகாசம் தர வேண்டும் என விஜய் மல்லையா தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 24-ம் தேதி வரை பதிலளிக்க மல்லையாவுக்கு அவகாசம் தந்து வழக்கை ஒத்தி வைத்தார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டப்படி பொருளாதார குற்றங்கள் செய்தவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ள போது, நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொள்ளாமல், இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புகளிலிருந்து தப்பித்து தலைமறைவானால், அவர்களை தலைமறைவு குற்றவாளி யாக அறிவித்து அவர்களது சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்யலாம் என்ற அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டது.