எம்.எல்.ஏ. சீட் வேண்டுமா? பேஸ்புக்கில் 15,000 லைக், டுவிட்டரில் 5000 பாலோவர்கள் அவசியம் - காங்கிரஸ் உத்தரவு
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்தில் போட்டியிட விரும்புபவர்கள் பேஸ்புக்கில் லைக், டுவிட்டர்களில் பாலோவர்களை பெறுவதற்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 165 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் 58 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. விரைவில் வர உள்ள தேர்தலுக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா தீவிரமாக தயாராகி வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, வியாபம் ஊழல் மற்றும் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. மறுபுறம் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே வெளியான கருத்து கணிப்பில் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு கட்சியின் தரப்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ம.பி. காங்கிரஸ் கடிதத்தில் போட்டியிட விரும்புபவர்கள் பேஸ்புக்கில் 15,000 லைக், டுவிட்டரில் 5000 பாலோவர்களை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி மேலும் பல்வேறு தகுதிகளை வரையறு செய்துள்ளது எனவும் தெரிகிறது. வாட்ஸ்-அப் குழுவில் தீவிரமாக செயல்பட வேண்டும் என தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மாநில காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் போஸ்ட்களுக்கு லைக் போட வேண்டும், மறுடுவிட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் தொடர்பான தகவல்களை கட்சியின் ஐடி பிரிவிடம் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநில காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.