செயற்பாட்டாளர்கள் கைது “நீதிமன்றம் விசாரிக்கும் போது செய்தியாளர்களை சந்தித்தது ஏன்?” போலீஸ் மீது பாய்ச்சல்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது விவகாரத்தில் விசாரணை கோர்ட்டில் நடைபெற்றும் வரும் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது ஏன்? என்று மராட்டிய போலீஸை ஐகோர்ட்டு கடிந்துக்கொண்டது.

Update: 2018-09-03 09:47 GMT


மும்பை,

நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை மராட்டிய மாநில போலீஸ் நடத்திய சோதனையின் போது மாவோயிஸ்டு சிந்தனையாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மராட்டிய போலீசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 

இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கைது நடவடிக்கையை மேற்கொண்ட மராட்டிய மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே தொடர்புள்ளது என்பதை ஆதாரங்கள் காட்டுகிறது என மராட்டிய போலீஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை முன்வைத்து மராட்டிய மாநில சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை கூடுதல் போலீஸ் ஜெனரல் பாராம்பீர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

“சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கும், மாவோயிஸ்ட் இயத்தினருக்கும் இடையே தொடர்புள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது,” என்றார். பரிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சதிதிட்டம் தீட்டியுள்ளது. மாவோயிஸ்ட்களின் சதிதிட்டம் நிறைவடைய குற்றவாளிகள் உதவி செய்து உள்ளனர். இதில் ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளது.

 17 மே அன்று சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கவனத்தை திசைத்திருப்பும் வகையிலும், மிகப்பெரிய குழப்பத்தை ஏற்பட செய்யும் வகையிலும் மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கிறது. ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் அரங்கேற்ற மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டதற்கான ஆதாரம் உள்ளது என தெரிவித்தார். அவர் செய்தியாளர்கள் முன்னதாக ஆவணங்களை சமர்பித்ததற்கும், பேட்டியளித்ததற்கும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஐகோர்ட்டு பாய்ச்சல்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது விவகாரத்தில் விசாரணை கோர்ட்டில் நடைபெற்றும் வரும் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது ஏன்? என்று மராட்டிய போலீஸை ஐகோர்ட்டு கடிந்துக்கொண்டது. கோரேகான் பீமா வன்முறை விவகாரத்தில் தவறாக தன்னையும் சேர்த்துள்ளதாக சதீஷ் காய்க்வாத் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புனே போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு,  “வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் உள்ள போது, போலீஸ் எப்படி செய்தியாளர்களை சந்திக்கலாம். இவ்விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் தகவல்களை வெளியிடுவது என்பது மிகவும் தவறானது,” என்றது. 

இதனையடுத்து அரசு வழக்கறிஞர், மாநில காவல் துறையிடம் பேசுவதாகவும் பதிலை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

மேலும் செய்திகள்