வாகனம் மீது கல்வீச்சு சம்பவம்; பலம் இருந்தால் வெளிப்படையாக மோதுங்கள்: சவுகான் பேச்சு

பலம் இருந்தால் வெளிப்படையாக மோதுங்கள் என வாகனம் மீது கல்வீச்சு நடந்த சம்பவத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு சவுகான் சவால் விடுத்துள்ளார்.

Update: 2018-09-03 03:09 GMT

சித்தி,

மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தேர்தல் பிரசாரத்திற்காக மாநிலம் முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறார்.

இதற்காக அவர் சித்தி மாவட்டத்தின் அருகே சுர்ஹாத் என்ற பகுதியில் பிரசார பணிக்காக சென்றுள்ளார்.  அவர் ரதம் போன்று வடிவமைக்கப்பட்ட பேருந்து ஒன்றில் சென்றபொழுது அவரது வாகனம் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் சவுகானுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.  சவுகான் சென்ற பகுதி எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங்கின் சட்டமன்ற தொகுதியாகும்.

இதன் பின்னர் பொது கூட்டமொன்றில் பேசிய சவுகான், அஜய் சிங், உங்களுக்கு பலம் இருந்தால் வெளிப்படையாக வந்து என்னுடன் மோதுங்கள் என பேசினார்.

ஆனால் அஜய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடவில்லை.  வன்முறை கலாசாரத்தினை எங்கள் கட்சி பின்பற்றுவதில்லை என கூறினார்.

இது என் மீதும் மற்றும் சுர்ஹாத் பகுதி மக்கள் மீதும் அவதூறு பரப்ப திட்டமிடப்பட்ட சதி என்றே சந்தேகிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்