கிருஷ்ணதேவராய மன்னர் திருப்பதி கோவிலுக்கு வழங்கிய தங்க நகைகள் என்ன ஆனது? மத்திய அரசு பதில் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராய மன்னர் வழங்கிய தங்க நகைகள் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-02 23:15 GMT
புதுடெல்லி, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராய மன்னர் ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய தகவல் கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருப்பதை 2011-ம் ஆண்டு ஐதராபாத் தொல்லியல் துறை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. மேலும் தற்போது கோவிலில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் பட்டியலில் கிருஷ்ணதேவராய மன்னர் வழங்கிய ஆபரணங்கள் குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் என்ற சமூக ஆர்வலர் திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்றும் திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு எந்த துறையும் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு இதுபற்றி அய்யங்கார் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விரிவாக ஆய்வு செய்தார். பின்னர், அய்யங்கார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி இந்திய தொல்லியல் துறை, மத்திய கலாசார அமைச்சகம், ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்