காஷ்மீரில் போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கண்ணீர் புகைவீச்சு

காஷ்மீரில் போலீசுக்கு எதிராக பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினார்கள்.

Update: 2018-09-02 22:15 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலம் சோபியான்னில் உள்ள இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இந்திய ராணுவம், சிறப்பு அதிரடிப்படை, மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சேர்ந்து கூட்டாக நேற்று அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீஸ் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். சிறிதுநேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் யாரும் உயிரிழந்ததாக தெரியவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த தகவல் அந்த கிராமத்தில் பரவியது. உடனே பொதுமக்கள் போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். ஆனால் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்தனர்.

இதனையடுத்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் அந்தப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்