சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,
இந்தியாவின் சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது.
இந்த இரண்டு மாநிலங்களை சேர்ந்த போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் தேடுதல் வேட்டையின்போது நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள குமியாபெடா கிராமத்தின் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட ரிசர்வ் படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசாரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாத சில நக்சலைட்டுகள் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தனர். இந்த துப்பாக்கிசூட்டில் குண்டு பாய்ந்து பெண் உள்பட 4 நக்சலைட்டுகள் இறந்தனர். அங்கு இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.