ஒழுக்கத்தோடு இருங்கள் என்று சொன்னால் சர்வாதிகாரி என முத்திரை குத்திவிடுகின்றனர் - பிரதமர் மோடி
ஒழுக்கத்தோடு இருங்கள் என சொன்னால் சர்வாதிகாரி என முத்திரை குத்திவிடுகின்றனர் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய 'Moving on.. Moving Forward: A Year in Office' என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
விவசாயம், விவசாயிகள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு பண்பாணவர். ஆனால் இன்றைய நிலையில் பண்போடு இருங்கள் என தெரிவித்தால். அது ஜனநாயகத்திற்கு விரோதம் என கூறிவிடுகின்றனர்.
பண்போடும், கட்டுப்பாட்டோடும், ஒழுக்கத்தோடும் இருங்கள் என சொல்பவரை சர்வாதிகாரி என முத்திரை குத்திவிடுகின்றனர். 10 ஆண்டுகள் மாணவர் அரசியலிலும், 40 ஆண்டுகள் தேசிய அரசியலிலும் இருந்தவர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது வெங்கையா நாயுடுவிற்கு மந்திரி பதவியை தர விரும்பினார். எனக்கு ஊரக வளர்ச்சி துறையை தருமாறு கேட்டு பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் முன்னாள் பிரதம மந்திரிகள் தேவ கவுடா, மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ஆனந்த் குமார் மற்றும் ராஜ்ய சபா எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.