செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: ஆந்திர அதிரடிப்படையினர் நடவடிக்கை

ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அதிரடிப்படையினரால் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார்.

Update: 2018-09-01 23:45 GMT
ஸ்ரீகாளஹஸ்தி,

ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்னூல், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படும் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. ‘சிவப்பு தங்கம்’ என்று வர்ணிக்கப்படும் செம்மரங்களுக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி இருப்பதால் சட்டவிரோதமாக இதை வெட்டி கடத்துகின்றனர். இந்த மரங்கள் டன் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்துவதற்கு தமிழகத்தின் திருவண்ணாமலை, சேலம், வேலூர், விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கூலியாட்களாக ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒரு மரத்தை வெட்டினால் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைப்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டு வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள், சேஷாசலம் வனப்பகுதிக்கு செம்மரங்களை வெட்டுவதற்காக செல்கிறார்கள்.

செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர அரசு சிறப்பு அதிரடிப்படையையும் அமைத்துள்ளது. இப்படையினர், அவ்வப்போது சேஷாசலம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டுவோரை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்வதும் நடக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர அதிரடிப்படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

இதன்பிறகும் கடந்த 3 ஆண்டுகளில் 2 என்கவுண்ட்டர்கள் சேஷாசலம் வனப்பகுதியில் நடந்துள்ளன.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே கொல்லப்பள்ளி வனப்பகுதியில் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக நேற்று முன்தினம் இரவு கடப்பா மாவட்ட அதிரடிப்படையினருக்கு தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்தனர். நள்ளிரவு 2.30 மணி அளவில் கொல்லப்பள்ளி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துபவர்களை சல்லடை போட்டு தேடினர். வெகு நேரத்துக்கு பின்பு அந்த கும்பலை கண்டுபிடித்து சுற்றிவளைத்தனர்.

கோடரி, கத்தி போன்ற ஆயுதங்களை அவர்கள் வைத்து இருந்ததால் அதிரடிப்படையினர் அவற்றை கீழே போட்டு விட்டு சரண் அடையும்படி எச்சரித்தனர். ஆனால் அந்த கும்பலில் இருந்தவர்கள் அதிரடிப்படையினரை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். கத்திகளையும் வீசினர். இருளில் எந்த பக்கம் இருந்து கற்கள் வீசப்படுகிறது என்பது தெரியாமல் தவித்த அதிரடிப்படையினர் பிறகு தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

என்றபோதிலும், செம்மரங்களை வெட்ட வந்த கும்பல் அதிரடிப்படையினரை நோக்கி தொடர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த கும்பலை நோக்கி அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுருண்டு விழுந்து பலியானார். அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

மற்ற அனைவரும் இருளை பயன்படுத்தி அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு கூடுதலாக வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் குவிக்கப்பட்டனர். பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

தப்பி ஓடிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் கடத்தல் கும்பல் விட்டுச்சென்ற அரிசி, பருப்பு, குடிநீர் ஆகியவற்றுடன் ஒரு கத்தி, ஒரு கோடரி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதற்கிடையே என்கவுண்ட்டரில் பலியானவர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கானாமலை என்ற கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 53) என்பது தெரிய வந்துள்ளது.

பிடிபட்ட மற்றொருவரின் பெயர் விவரம் குறித்து அதிரடிப்படையினர் உடனடியாக தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆந்திர போலீசாரின் தகவலின் பேரில் ஜவ்வாதுமலை போலீசார் கானாமலை கிராமத்துக்கு சென்று காமராஜின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் காமராஜின் உடலை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்