கடந்த ஆண்டு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வு முடிவை வெளியிட தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கடந்த ஆண்டு பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி.) நடத்திய தேர்வு முடிவை வெளியிட தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி காலியிடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி.) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களுக்காக கடந்த ஆண்டு போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. பட்டதாரி மட்டத்திலான இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு எஸ்.எஸ்.சி. பரிந்துரைத்தது. அதன்படி இந்த முறைகேட்டை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதிய இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியார் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நிலை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர். கறைபடிந்த இந்த தேர்வால் யாரும் பயனடைவதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.