பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஏர் இந்தியா பொது மேலாளர் பணி நீக்கம்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பணிப்பெண் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை அடுத்து அதன் பொது மேலாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மும்பை,
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் பொது மேலாளர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுபற்றி அவர் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கும் கடிதத்தின் நகலை அனுப்பி உள்ளார். அதன்பின் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி மேனகா காந்தியையும் விமான பணிப்பெண் சந்தித்து பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இதுபற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி கடந்த ஜூனில் மேனகாவின் அமைச்சகம் ஏர் இந்தியாவுக்கு கூறியிருந்தது. அந்த பணிப்பெண் தனது குற்றச்சாட்டில், முன்னணி ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுடன் மூத்த அதிகாரியை ஒப்பிட்டு உள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் ரீதியில் துன்புறுத்தினார். எனது முன்னிலையில் பிற பெண்களிடம் தகாத வார்த்தைகளை பேசினார். அலுவலக பகுதிகளிலேயே பாலியல் செயல்களை பற்றி என்னிடம் பேசினார். பிற பெண்களிடமும் எனது முன்னிலையில் பாலியல் செயல்களை பற்றி பேசினார்.
அவரது செயல்களுக்கு மறுப்பு தெரிவித்த என்னை அவமரியாதை செய்துள்ளார். எனக்கான பதவிகளை கிடைக்க விடாமல் செய்துள்ளார். எனது வாழ்க்கையை துன்பம் நிறைந்த ஒன்றாக எனது பணிசூழலில் செய்ததுடன் அதனை தொடர்ந்தும் வருகிறார்.
கடந்த வருட செப்டம்பரில் ஏர் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் அவர் கடந்த மே மாதத்தில் கடிதம் எழுதினார். இதுபற்றி உடனடியாக விசாரிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கரோலாவுக்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டார். இந்த நிலையில் குற்றச்சாட்டு கூறப்பட்ட மூத்த அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
எனினும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நபர் விமானியாக பணிபுரிந்தவர் என்பதனால் அவர் பழைய பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.