‘நிதி ஆயோக்’ பரிந்துரையை ஏற்று மத்திய அரசு துறைகளில் தனியார் வல்லுனர்கள் நியமனம் மோடி அரசு அதிரடி முடிவு
‘நிதி ஆயோக்’ பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு துறைகளில் தனியார் வல்லுனர்களை நியமிக்க மோடி அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
புதுடெல்லி,
‘நிதி ஆயோக்’ பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு துறைகளில் தனியார் வல்லுனர்களை நியமிக்க மோடி அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
‘நிதி ஆயோக்’ பரிந்துரைமத்திய அரசில் 48 லட்சம் அதிகாரிகளும், பணியாளர்களும் உள்ளனர். 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவும் உள்ளன. இது 2015–ம் ஆண்டு, மார்ச் 1–ந் தேதி நிலவரம்.
இந்த நிலையில், தனியார் துறையில் கொடி கட்டிப்பறக்கும் ஆற்றல் வாய்ந்த வல்லுனர்களை அரசுத்துறைகளுக்கு கொண்டு வந்து, அவர்களது ஆற்றல்களையும், திறமையையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தேவையான ஒன்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:–
* இன்றைய சிக்கலான பொருளாதார சூழலில் கொள்கை வகுப்பது என்பது ஒரு சிறப்பான நடவடிக்கை ஆகும். எனவே அரசு அமைப்பில் தனியார் துறை வல்லுனர்களை கொண்டு வருவது என்பது தேவையான ஒன்றாகும்.
* இப்படி தனியார் துறை வல்லுனர்களை அரசு துறைக்குள் கொண்டு வருகிறபோது, அது அதிகார வர்க்கத்தினரிடையே சிறப்பான போட்டியை கொண்டு வருகிற விளைவை ஏற்படுத்தும்.
* சிறப்பான அறிவு தேவைப்படுகிற துறைகளில், உள் ஊழியர்களிடையே நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கு, தனியார் துறையினரை கொண்டு வருவது முக்கியம்.
* மிகச் சிறப்பான நிபுணத்துவம் பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். 3 முதல் 5 ஆண்டு காலத்துக்கு அவர்களை நியமனம் செய்ய வேண்டும். இப்படி செய்கிறபோது அது அரசாங்கத்தில் மிக உயர்ந்த திறமையையும், ஆற்றலையும் கொண்டு வந்து சேர்க்கும். அமைச்சகங்களுக்கு புதிய பரிமாணத்தையும் கொண்டு வரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
அதிகாரிகள் நியமனம்அதன் அடிப்படையில், தனியார் வல்லுனர்களை சில துறைகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமனம் செய்யத் தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் ஆயுர்வேத மருத்துவரான ராஜேஷ் கோடேச்சா, ஆயுஷ் அமைச்சகத்தில் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக இத்தகைய பதவியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிதான் நியமிக்கப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சுகாதாரத்துறை வல்லுனருமான பரமேஸ்வரன் அய்யர், குடிநீர், சுகாதாரத்துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் 50 பேர் நியமனம்இந்த நிலையில் மேலும் 50 தனியார் துறை வல்லுனர்களை அரசு துறைகளுக்குள் கொண்டு வர மத்திய அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. இவர்கள் இயக்குனர், இணைச்செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்படுவார்கள் என்று பணியாளர் நலன், பயிற்சித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.