தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,914 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர், விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-22 22:45 GMT
மைசூரு,

கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,914 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்தக்கோரியும் பா.ஜனதாவினர், விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. பெங்களூரு, மைசூரு, குடகு, சிவமொக்கா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 22,052 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 84.70 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த உயரம் 124.80 அடி ஆகும்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

இதேபோல் கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த அணை தனது முழு கொள்ளளவை எட்ட 7 அடியே பாக்கி உள்ளது. தற்போது கபினி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,414 கடி அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 3,914 கன அடி வீதம் தண்ணீரை காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து அறிந்த பா.ஜனதாவினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தக்கோரியும் நேற்று மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில், காவிரி ஆற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா பகுதியிலும் விவசாயி ஒருவர் தனியாக காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். 

மேலும் செய்திகள்