அந்தமான் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது 11 ஊழியர்கள் உயிருடன் மீட்பு
அந்தமானில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்த சரக்கு கப்பல் மோசமான தட்பவெப்பம் காரணமாக திடீரென கடலில் மூழ்கியது.
போர்ட் பிளேர்,
அந்தமானில் இருந்து கொல்கத்தா நோக்கி சரக்கு கப்பல் ‘ஐ.டி.டி. பாந்தர்’ நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 29 கன்டெய்னர்கள் இருந்தன. அதில் 200 டன் இரும்பு, 500 டன் மணல், கார்கள் உள்ளிட்டவை இருந்தன.
அந்த கப்பல் வடக்கு அந்தமான் தீவு அருகே 120 நாட்டிகல் மைல் தொலைவில் மோசமான தட்பவெப்பம் காரணமாக நேற்று காலை திடீரென கடலில் மூழ்கியது. இது பற்றி தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் 3 விமானங்களில் அங்கு மீட்புபணிக்கு சென்றனர்.
அப்போது கப்பலில் இருந்த சிறிய ரக படகில் ஏறி தப்பிய 11 ஊழியர்கள் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும், மூழ்கிய கப்பலை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.