பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புதுடெல்லி,
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.பி.க்களும் உடன் சென்றனர்.
தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு தமிழக எம்.பி.க்களுடன் டெல்லி சென்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை காலை 10.30 மணியளவில் நேரில் சந்தித்து தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பகல் 12 மணியளவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்தையும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பகல் 12.20 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து, தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று உதவிடுமாறு தமிழக அமைச்சர்கள் குழு கோரிக்கை வைத்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய மந்திரிகள் ஆகியோர் தமிழகத்தின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.