ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, பா.ஜனதா கோவிந்த் வெற்றி விகிதத்தில் கவனம் செலுத்துகிறது

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா ராம்நாத் கோவிந்திற்கு கிடைக்கும் வெற்றி விகிதத்தில் கவனம் செலுத்துகிறது.

Update: 2017-07-20 03:47 GMT

புதுடெல்லி,


தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டனர். 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். 99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிந்ததும் மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது, இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், அவர் புதிய ஜனாதிபதி ஆகிறார் என்பது முன்னதாகவே அறியப்பட்டது. பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அறிவித்தன. 

சமாஜ்வாடி கட்சியில் இவ்விவகாரத்தில் இரு பிளவு ஏற்பட்டது ஏற்கனவே தெரிந்தது. பீகாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் ஆதரவு குறித்து குளறுபடி காணப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மீரா குமாரை களமிறக்கி உள்ளது. ராம்நாத் கோவிந்த் வெற்றி உறுதி செய்யப்பட்டாலும் பாரதீய ஜனதா அவருக்கு கிடைக்கும் வெற்றி விகிதத்தை கவனிக்கும். 

மேலும் செய்திகள்