திவாகர் ரெட்டி எம்.பி விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த திவாகர் ரெட்டி எம்.பி விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்.பி. திவாகர் ரெட்டி, இவர் அண்மையில் விசாகபட்டணம் விமான நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய தாமதமாக வந்தார்.இதனால் விமான நிறுவன ஊழியர், கவுன்ட்டர் மூடப்பட்டுவிட்டதால் நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது. அடுத்த விமானத்தில் பயணம் செய்யலாம் என்றார். உடனே அவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு தள்ளியதுடன் கோபத்தில் அங்கிருந்த ஒரு தட்டச்சு எந்திரத்தை தரையில் தள்ளிவிட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இந்தச் சம்பவங்களை கவனத்தில் கொண்டு, இண்டிகோ விமான நிறுவனம் முதலில் அவருக்கு தனது விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. அதையடுத்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் விஸ்தாரா, கோ ஏர், ஏர் ஆசியா உள்ளிட்ட 8 விமான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் உள்ளூர் விமானங்களில் பயணம் செய்ய திவாகர் ரெட்டிக்கு தடை விதித்தது.
இந்த தடையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் தனக்கு விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி திவாகர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இதற்கிடையில், இன்று மூத்த எம்.பி. சவுத்ரி ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் இண்டிகோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள், திவாகர் ரெட்டியை சந்தித்து, அவர் மீதான தடையை நீக்குவது தொடர்பாக பேசி உள்ளனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்பட்டதையடுத்து, ரெட்டி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார். அதேசமயம் ரெட்டி மீதான தடையை நீக்கவும் இண்டிகோ நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.