மாயாவதியின் மேல் சபை எம்.பி பதவியின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுப்பு?
உரிய விதிகளின் படி ராஜினாமா கடிதம் இல்லாததால் மாயாவதியின் மேல் சபை எம்.பி பதவியின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட விவகாரம் குறித்து, டெல்லி மேல்-சபையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று பிரச்சினை எழுப்பி ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர், தனது பேச்சை 3 நிமிடத்தில் முடித்துக் கொள்ள வேண்டும் என்று சபையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறினார்.
உடனே மாயாவதி கொந்தளித்தார். அவர் குரியனை நோக்கி, “எனது சமூகத்தைப் பற்றிய பிரச்சினையை நான் எழுப்புகிறபோது எப்படி தடுக்கிறீர்கள்? நான் என் பேச்சை முடிக்கவில்லை. தலித்துகளுக்கு எதிராக அரங்கேற்றப்படுகிற வன்கொடுமைகளைப் பற்றி நான் பேச அனுமதிக்கப்படாதபோது, இந்த சபையில் இருக்கிற தார்மீக உரிமை எனக்கு இல்லை” என்றார். அப்போது குரியன், “இப்போது முழுமையான பேச்சு பேசாதீர்கள். விதி எண்.267-ன் கீழ் வேண்டுமானால், (ஒத்திவைப்பு தீர்மானம்) நோட்டீஸ் கொடுத்து, விவாதிக்க கோரலாம்” என குறிப்பிட்டார்.
ஆனால் மாயாவதி சமாதானம் அடையவில்லை. குரியன் தனது இருக்கையில் இருந்து எழுந்து, அவரை சமாதானப்படுத்த முயற்சித்தார்.ஆனால் மாயாவதி, “நான் சபையில் இருந்து ராஜினாமா செய்யப்போகிறேன்” என்று கோபமாக கூறிவிட்டு வெளியேறினார்.இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் அவர் தான் சொல்லியபடியே மேல்-சபை எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.அவர் மேல்-சபையின் தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்தார். அவரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
மாயாவதி தனது ராஜினாமா கடிதத்தை அளித்து ஒருதினம் ஆன போதிலும், அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மாயாவதி மூன்று பக்க அளவில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். மாயாவதி அளித்துள்ள வடிவத்தில்(ஃபார்மட்) ராஜினாமா கடிதம் தேவையில்லை. பாராளுமன்றத்தில் ராஜினாமா என்பது நிபந்தனையற்றது என்ற நோக்கத்தில் இருக்க வேண்டும் என்று ராஜ்யசபா செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜினாமா கடிதத்தில் எந்த விளக்கமும் தேவையில்லை. ஹமீது அன்சாரியிடம் மாயாவதி அளித்த ராஜினாமா கடிதத்தில், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது உட்பட முழு விவரமும் அடங்கியுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.