ருசியான சாப்பாடு ஜெயலலிதா சமையல்காரி சசிகலாவுடன் ஜெயிலில் தங்கி இருந்ததாக தகவல்?

வாய்க்கு ருசியான சாப்பாட்டிற்காக ஜெயலலிதாவுக்கு சமையல் செய்தவர் சசிகலாவுடன் ஜெயிலில் தங்கி இருந்தாரா? என புதிய தகவல் வெளியாகி உள்ளது

Update: 2017-07-18 08:48 GMT
பெங்களூர்,

பெங்களூர் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை தண்ணீராக செலவு செய்து, தேவையான எல்லா வசதிகளையும் சொத்துக் குவிப்பு கைதி சசிகலா பெற்றிருப்பது அனைத்துத் தரப்பினரிடமும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஜெயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல் தனக்கு தேவையான உணவை சசிகலா, ஜெயிலில் பிரத்யேகமாக தயாரித்து சாப்பிட்டு இருப்பது டி.ஐ.ஜி. ரூபா வெளியிட்ட கடிதம் மூலம் அம்பலமானது. மேலும் அந்த உணவை தயாரிக்க சசிகலாவுக்காக தனி சமையல் அறை கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் எப்போது  தொடங்கின? இதற்கு துணை போன ஜெயில் அதிகாரிகள் யார்- யார் என்ற விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் முழு தகவல்களும் வெளியில் வருமா? என்ற எதிர்பார்ப்பும் சந்தேகமும் பொது மக்களிடம் நிலவுகிறது.

இந்த நிலையில் பெங்களூர் சிறையில் போயஸ் கார்டனைச் சேர்ந்த சமையல்காரி ஒருவர் தங்கி இருந்து சசிகலாவுக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவுக்கு வாய்க்கு ருசியாக வகை, வகையாக சமைத்து போடுவதற்கு என்றே அந்த
சமையல்காரியை போயஸ்கார்டனில் இருந்து வரவழைத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் தங்க வைத்திருந்துள்ளனர்.

அந்த சமையல்காரி எப்போது பெங்களூர் சிறைக்குள் சென்றார் என்பது மர்மமாக உள்ளது. அவரால் எப்படி பலத்த பாதுகாவல்களை மீறி சிறைக்குள் வர முடிந்தது என்று உயர்  அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

சசிகலாவிடம் பணம் வாங்கிக் கொண்டு  சிறை அதிகாரிகள் ஒதுக்கி கொடுத் திருந்த 5 அறைகளில் ஒரு அறையில் அந்த சமையல்காரி தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கான உணவு வகைகளை
 தயாரிக்க மூன்றுக்கும் மேற்பட்ட பெண் சமையல் கலைஞர்கள் இருந்தனர். அந்த சமையல் காரிகளில்    ஒருவர்தான் சசிகலாவுடன் ஜெயிலில் தங்கி இருந்து உணவு தயாரித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த சமையல் காரியின் பெயர் என்ன என்பது வெளியிடப்படவில்லை. சசிகலாவுக்கு  மட்டுமின்றி இளவரசிக்கு தேவையான உணவு வகைகளையும் அந்த பெண் சமைத்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வசதியையும் பெற பணத்தை லஞ்சமாக கொடுத்த சசிகலா தரப்பினர்,  போயஸ்கார்டன் சமையல்காரியை பெங்களூர் சிறைக்குள் கொண்டு செல்ல பல லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்து இருக்கலாம் என்றும், அதனால்தான் சமையல்காரி ஒருவர் சசிகலாவுடன் தங்கியிருந்தது வெளியில் தெரியாமல் போய் விட்டது என்றும் பெங்களூரில் சிறைத் துறையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதுபோல சசிகலாவை சந்திக்க சென்ற பார்வையாளர்கள், நேரடியாக அவரது அறை வரை சென்று வந்துள்ளனர். இதற்கு அனுமதி கொடுக்கவும் சிறைத்துறையினர் லஞ்சம்  பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.

சசிகலா விஷயத்தில் சிறையில் மேலும் பல திடுக்கிடும் விதிமீறல்கள் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சர்ச்சை கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகள்