துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வெங்கையா நாயுடு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் முடிவடைவதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார்.
வெங்கையா நாயுடு இன்று தேர்தல் அதிகாரியிடம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வெங்கையா நாயுடு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்த போது அவருடன் பிரதமர் மோடி, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் உடன் இருந்தார்கள். அதிமுக, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் எம்.பி.க்களும் உடன் இருந்தனர். சிவசேனாவும் உடன் இருந்தது. தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டர்களில் வெங்கையா நாயுடு கருத்து பதிவிட்டு வருகிறார். எனக்கு வாழ்த்து தெரிவித்து, ஆதரவளித்த தம்பிதுரை மற்றும் அதிமுக எம்.பி.க்களுக்கு என்னுடை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிஉள்ளார்.
I thank Sh Thambidurai and MPs from AIADMK for extending their warm wishes and support. pic.twitter.com/jn5XpRHOL0
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) July 18, 2017
ஆதரவு தெரிவித்த முலாயம் சிங் யாதவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என வெங்கையா நாயுடு டுவிட் செய்து உள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் என்னை நிறுத்தி என் மீது நம்பிக்கை வைத்து உள்ள பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றிகடன் பட்டு உள்ளேன் எனவும் டுவிட் செய்து உள்ளார் வெங்கையா நாயுடு.