டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-16 23:42 GMT

புதுடெல்லி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராடுவதற்காக சுமார் 50 விவசாயிகள் நேற்று டெல்லி போய்ச் சேர்ந்தனர்.

அனைத்து விவசாயிகளும் அரை நிர்வாணமாக வெறும் கோமணம் மட்டும் கட்டிக்கொண்டு லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தின் முன்பு உள்ள சாலையில் நேற்று காலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்கள் அனுமதி பெற்று இருந்தாலும் அங்கு உட்காராமல் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் உள்ள பிரதமர் இல்லம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் டெல்லி போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று காவலில் வைத்தனர். பின்னர் மாலை 4.30 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, விவசாயிகள் அனைவரும் அய்யாக்கண்ணு தலைமையில் ஜந்தர் மந்தர் பகுதியை அடைந்து தர்ணாவில் அமர்ந்தனர்.

போலீசாரால் விடுவிக்கப்பட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அய்யாக்கண்ணு கூறியதாவது:–

கடந்த முறை நாங்கள் போராட்டத்தை முடிக்கும் போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்கள். உங்கள் நகை ஏலம் போகாது. நிலம் ஏலம் போகாது என்று உறுதி கூறினார்கள்.

ஆனால் இப்போது எங்கள் நகைகள் ஏலம் போகின்றன. நிலங்களை எல்லாம் ஏலம் விட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று எங்களிடம் முதல்–அமைச்சர் கூறிய நிலையில், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள். நாங்கள் அன்றாடம் வழக்குகளை சந்தித்து வருகிறோம்.

20 நாட்களில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கூறினார்கள். இப்போது 80 நாட்கள் ஆகியும் எந்த பிரச்சினையும் தீரவில்லை. எனவேதான் நாங்கள் டெல்லிக்கு வந்து இறங்கியதும் நேராக பிரதமரின் வீட்டுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட தொடங்கினோம்.

அங்கு எங்களை போலீசார் கைது செய்து பாராளுமன்ற தெரு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். காலையில் இருந்து எங்களுக்கு உணவு அளிக்கப்படவில்லை. வயதான விவசாயிகள் மயங்கி விழ தொடங்கினார்கள். நாங்கள் வெளியில் சென்று சாப்பிடுகிறோம் என்று சொன்னாலும் எங்களை அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறலாகும்.

நூறு நாட்கள் ஆனாலும் எங்கள் போராட்டம் தொடரும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு போக மாட்டோம். ஒவ்வொரு நாளும் வினோதமான முறையில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

மேலும் செய்திகள்