ஜனாதிபதி தேர்தல்: சமாஜ்வாடி இருபிரிவானது, மீராவிற்கு அகிலேசும், கோவிந்துக்கு முலாயமும் ஆதரவு

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் சமாஜ்வாடி கட்சி இரு பிரிவாகி உள்ளது. அகிலேஷ் யாதவ் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

Update: 2017-07-16 08:07 GMT
லக்னோ,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி இரு பிரிவாகி உள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி பெரும் பின்னடைவை சந்தித்தது. சமாஜ்வாடியில் முலாயம் சிங் - அகிலேஷ் யாதவ் இடையிலான மோதல் முற்றியதே அக்கட்சியின் படுதோல்விக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

மாநில சட்டசபையில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது வெறும் 47 ஆக குறைந்து உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் கட்சியில் பிரிவு தென்பட்டு உள்ளது. சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டு உள்ள இப்போதைய இந்த பிரிவினால் ஜனாதிபதி தேர்தல் முடிவில் எந்தஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், குடும்பத்தில் ஏற்கனவே உள்ள பிரச்சனையானது மேலும் அதிகரிக்கும் எனவும் சமாஜ்வாடி கட்சிக்குள் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோவிந்தை பா.ஜனதா அறிவித்ததும் அவர் மிகவும் வலுவானவர் என்றார் முலாயம் சிங். மாறாக ஜூன் 20-ம் தேதி யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சியிலும் முலாயம் சிங் கலந்து கொண்டார். இதுவே அவர் கோவிந்தை ஆதரிக்கிறார் என்பதை காட்டியது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்டு உள்ள மீரா குமாரை ஆதரிக்கிறார்கள். சிவபால் யாதவ் பேசுகையில் முலாயம் சிங் எடுக்கும் முடிவே இறுதியானது என்றார், இதுவே அவருடைய தரப்பு கோவிந்தை ஆதரிக்கிறது என்பதை தெளிவுபடுத்தியது. கடந்த வெள்ளியன்று மீரா குமார் சமாஜ்வாடி தலைமை அலுவலகத்தில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். மாயாவதியும் சந்தித்து பேசி ஆதரவு கோரினார். அகிலேஷ் யாதவ் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். 

மற்றொரு சமாஜ்வாடி தலைவரும், கட்சியின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ராம் கோவிந்த் சவுதாரி, எல்லோரும் மீரா குமாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றார். சமாஜ்வாடி கட்சிக்கு மக்களவையில் 5 எம்.பி.க்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 19 உறுப்பினர்கள் உள்ளனர். கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதில் இருந்து அமர்சிங் மாநிலங்களவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை. சமாஜ்வாடிக்கு உத்தரபிரதேசத்தில் மொத்தம் 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 

மேலும் செய்திகள்