அமர்நாத் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் கடந்த 10-ம் தேதி அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்த பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி இந்த பயங்கர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயிலை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படைகள் தீவிரமாக இறங்கி உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து லலிதா (வயது 47) என்ற பெண் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 8 ஆக உயர்ந்து உள்ளது.