அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல்: காஷ்மீர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் டிரைவர் கைது

காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் மீது கடந்த 10–ந்தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Update: 2017-07-15 23:30 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் மீது கடந்த 10–ந்தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தவுசீப் அகமது என்ற போலீஸ்காரரை சமீபத்தில் விசாரணைக்காக அதிகாரிகள் பிடித்து சென்றனர். காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் வாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வான அய்ஜாஸ் அகமது மிர்ரின் டிரைவராக பணியாற்றி வந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களுக்கு அவர் துணை போனது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தவுசீப் அகமதுவை போலீசார் கைது செய்தனர். அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதலில் இவருக்கு நேரடி தொடர்பு உண்டா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று கூறிய போலீசார், அது குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

அமர்நாத் தாக்குதல் தொடர்பாக சில பயங்கரவாத அமைப்புகளின் களப்பணியாளர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்