ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட இருக்கும் 1,581 குற்ற பின்னணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 1,581 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2017-07-16 00:00 GMT

கொல்கத்தா,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பின்னணியை ‘ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்’ மற்றும் ‘தேசிய தேர்தல் கண்காணிப்பு’ ஆகிய அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. இந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலின் போது தங்கள் வேட்புமனுக்களுடன் அளித்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மொத்தமுள்ள 4,896 எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 4,852 பேரின் பிரமாண பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 774 எம்.பி.க்கள் (மொத்தம் 776 பேர்) மற்றும் 4,078 எம்.எல்.ஏ.க்கள் (மொத்தம் 4,120) அடங்குவர்.

இந்த அறிக்கையின் படி ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 4,852 எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 3,460 பேர் கோடீஸ்வரர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பாராளுமன்ற எம்.பி.க்கள் 445 பேர், மேல்–சபை எம்.பி.க்கள் 194 பேர் மற்றும் 2,721 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர். இது 71 சதவீதம் ஆகும்.

இதைப்போல 1,581 பேர் (33 சதவீதம்) குற்றப்பின்னணி கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. அதன்படி 184 பாராளுமன்ற உறுப்பினர்கள், 44 மேல்–சபை உறுப்பினர்கள் மற்றும் 1,353 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 993 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் ரீதியான குற்றங்கள் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் 9 சதவீதத்தினரே பெண்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 4,852 பிரமாண பத்திரங்களில் 451 மட்டுமே பெண் பிரதிநிதிகளுக்கானது என அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

மேலும் செய்திகள்