தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், முதல் குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2017-07-14 23:45 GMT

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், முதல் குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அடுத்து தாக்கல் ஆகும் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இடம்பெறும் என்று தனிக்கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டுகள் நரேஷ், லலித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, கடந்த ஜூன் 3–ந் தேதி அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். இதேபோல் ஹவாலா ஏஜெண்டுகளான நரேஷ், லலித் குமார் ஆகியோரும் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்

சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க தனிக்கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தனிக்கோர்ட்டில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி மனோஜ் ஜெயின் முன்னிலையில் டெல்லி போலீசார் இந்த முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 5 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் மீதான குற்றப்பத்திரிகை மட்டும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 701 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களின் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், கைப்பற்றப்பட்ட சி.டி.க்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் மற்றும் தினகரன் ஆகிய இருவரும் இரட்டை இலை சின்னத்தை பெறுவது குறித்து உரையாடி இருப்பது தெரியவருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ், தினகரன் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தல் கமி‌ஷனில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து தங்களுக்கு சாதகமாக தேர்தல் சின்னத்தை பெறுவதற்கு கூட்டு சதியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமான வழிமுறைகளில் தினகரனால் அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்து உள்ளது

.குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் மற்றும் தினகரன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் குறித்த புலனாய்வு, மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மற்றும் சாட்சியங்கள் தற்போது நிலுவையில் உள்ளன. தடயவியல் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தேர்தல் கமி‌ஷன் அதிகாரி பற்றியும் புலனாய்வு செய்யப்படும். அதேபோல், பல்வேறு முனைகளில் இருந்து பெறப்பட்ட சட்டவிரோதமான பணபரிமாற்றம் குறித்தும், கைப்பற்றப்பட்ட சொகுசு கார்கள் பற்றியும் புலனாய்வுகள் தொடருகின்றன.

தினகரன், மல்லிகார்ஜூனா உள்ளிட்ட மற்ற குற்றம் சாட்டப்பட்டோர் குறித்து புலனாய்வுகள் தொடர்ந்து வருகின்றன. இவர்கள் மீதான குற்றப்பத்திரிகை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததும், ‘‘இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் 5 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மீது மட்டும் இன்று ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறீர்கள்?’’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு டெல்லி போலீஸ் துணை கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் பதில் அளிக்கையில், ‘‘இந்த வழக்கில் இதுவரை முதல் குற்றவாளி சுகேஷ் சந்திரசேகருக்கு மட்டும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர் கைது செய்யப்பட்டு நாளையோடு (இன்று) 90 நாட்கள் முடிகிறது. எனவே, அவர் ஒருவர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மற்ற நான்கு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகை விரைவில் அடுத்து ஒவ்வொன்றாக தாக்கல் செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, வருகிற திங்கட்கிழமை சுகேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, குற்றப்பத்திரிகை தாக்கல் ஆவதற்கு முன்பாக இது தொடர்பாக பரபரப்பான தகவல் ஒன்று வெளியானது. அதாவது, குற்றப்பத்திரிகையில் தினகரனின் பெயரை டெல்லி போலீசார் சேர்க்கவில்லை என்றும், இதனால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுபற்றி டெல்லி போலீஸ் இணை கமி‌ஷனர் (குற்றப்பிரிவு) பிரவீண் ரஞ்சனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. தினகரன் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியான தகவல் தவறானவை’’ என்றார்.

அதன்பிறகு தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனதும் அவர் கூறியது உறுதியானது.

மேலும் செய்திகள்