தேஜஸ்வி பதவி விலகலாம்; நிதிஷ் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என லாலு விருப்பம்
நிதிஷ் குமார் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என லாலு விருப்பம் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாட்னா,
ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக சோதனையில் ஈடுபட்ட சிபிஐ பதிவு செய்து உள்ள எப்.ஐ.ஆர்.ரில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்று உள்ளது. லாலு மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணை முகமைகளின் வளையத்திற்குள் சிக்கிஉள்ளது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளிப்படையாக எந்தஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாநிலத்தில் ஆளும் மகா கூட்டணி (ஜக்கிய ஜனதா தளம் + ராஷ்டீரிய ஜனதா தளம் + காங்கிரஸ் )மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக கூறப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி சனிக்கிழமை மாலைக்குள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் குமார் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியது.
ஊழலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்ற தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து எந்தஒரு மாற்றமும் செய்ய முடியாது என கூறிவிட்ட நிதிஷ் குமார், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளவர்கள், குற்றமற்றவர்கள் என திரும்ப வேண்டியது அவசியமானது என கூறியதாக தகவல்கள் வெளியாகியது. மாநிலத்தில ஆட்சி செய்யும் மகா கூட்டணியை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என பா.ஜனதா சதிதிட்டம் தீட்டுவதாக ராஷ்டீரிய ஜனதா தளம் கூறியது. இதற்கிடையே கூட்டணி உடைந்துவிடாததில் காங்கிரசும் தனி கவனம் செலுத்துகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் நிதிஷ் குமாரிடம் பேசிஉள்ளனர்.
இந்நிலையில் பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதிஷ் குமார் தன்னுடைய நிலைப்பாட்டில் நிலையாக இருப்பதை அடுத்து லாலு பிரசாத் யாதவ் மாநிலத்தில் மகா கூட்டணி உடைந்துவிட கூடாது என்பதில் வலுவான நிலைப்பாட்டில் உள்ளார் என கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் கட்சியின் வலியுறுத்தல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது. சனிக்கிழமை வரையில் நிதிஷ் குமார் தேஜஸ்வி பதவி விலக கால அவகாசம் வழங்கி உள்ளார், இதனை நீட்டிக்க லாலு விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருகட்சிகள் இடையே அமைதியை ஏற்படுத்துவதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மாட்டு தீவன ஊழல் வழக்கு தொடர்பாக ராஞ்சி கோர்ட்டில் ஆஜராக அங்கு சென்று உள்ள லாலு சனிக்கிழமை பாட்னா திரும்புகிறார். அப்போது இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. “திங்கள் அன்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பாக இறுதி முடிவை அறிவிக்க வாய்ப்பு கிடையாது,” லாலு கட்சியின் உயர்மட்ட தலைவர் கூறிஉள்ளார்.