சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்பட்டதாக புகார்: விசாரணை அதிகாரி நியமனம்

சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்பட்டதாக வெளியான சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2017-07-14 07:40 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக டி.ஐ.ஜி. ரூபா பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். இதில் பல்வேறு குளறுபடிகளை கண்டறிந்தார். 

இது தொடர்பாக ரூபா நேற்று முன்தினம் மாலை கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர், கர்நாடக காவல் துறை இயக்குநர் ஆர்.கே.தத்தா, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பினார். 4 பக்கம் கொண்ட இந்த புகார் கடிதம் நேற்று முன்தினம் இரவு கன்னட ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக வெளியான செய்தி  தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை நடைபெறும் என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகள்