சவுதி அரேபியா தீ விபத்தில் 11 இந்தியர்கள் பலி: சென்னையை சேர்ந்த கட்டிட தொழிலாளியும் உயிர் இழந்தார்
சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த கட்டிட தொழிலாளியும் பலியானார்.
புதுடெல்லி,
சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த கட்டிட தொழிலாளியும் பலியானார். மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க அங்கு வேலைக்கு சென்றவருக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.
சவுதி அரேபியாவின் நஜ்ரன் மாகாணத்தில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் இந்தியா மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் சிலர் பைசாலியா மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்றுவந்தனர்.நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபோது, ஏ.சி. சாதனத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வீடு முற்றிலுமாக எரிந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி இந்திய தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை சேர்ந்தவர்மத்திய அரசு, சவுதி அரேபியாவுடன் தொடர்புகொண்டு சம்பவம் பற்றிய விவரங்களை கேட்டறிந்து வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் பெயர் விவரங்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இதில் சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், நேரு நகர், ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் கலியன்(வயது 54) மற்றும் கேரளா, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 11 பேரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.
முருகானந்தம் கலியன், கட்டிட தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இவருடைய மனைவி லட்சுமி(45). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி(26) என்ற மகளும், கார்த்திக்(24) என்ற மகனும் உள்ளனர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழ்ச்செல்விக்கு திருமணம் நடந்தது. மகளின் திருமணத்துக்காக வாங்கிய கடனை அடைக்கவே முருகானந்தம், ஒரு வருடத்துக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு கட்டிட வேலைக்கு சென்றார். முருகானந்தம் நேற்று முன்தினம் இரவு தூங்கப்போகும் முன்புதான் தனது குடும்பத்தினருடன் போனில் பேசி உள்ளார். ஜனவரி மாதம் சென்னை திரும்பி வந்துவிடுவதாக அப்போது தனது குடும்பத்தாரிடம் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
முருகானந்தம் புகை மூட்டத்தில் சிக்கி பலியாகிவிட்டதாக அவருடன் தங்கியிருந்த சிலர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முருகானந்தம் உடலை சென்னைக்கு விரைந்து கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏற்கனவே ஒருமுறை சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று திரும்பி வந்துவிட்ட முருகானந்தம், தற்போது கடனை அடைக்க மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு சென்றபோது தீ விபத்தில் சிக்கி பலியாகிவிட்டது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.