பீகாரில் கூட்டணி உடைகிறது? லாலு கட்சிக்கு நிதிஷ்குமார் 72 மணிநேர கால அவகாசம்

பீகார் அரசின் எதிர்க்காலத்தை தீர்மானம் செய்ய லாலு கட்சிக்கு நிதிஷ்குமார் 72 மணிநேர கால அவகாசம் அளித்து உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2017-07-12 12:40 GMT

பாட்னா,

ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். முறைக்கேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்து உள்ள எப்.ஐ.ஆர்.ரில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்று உள்ளது. லாலு மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணை முகமைகளின் வளையத்திற்குள் சிக்கிஉள்ளது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

நிதிஷ் குமார் அல்லது அவருடைய கட்சியனான ஐக்கிய ஜனதா தளம் இதுவரையில் சிபிஐ சோதனை தொடர்பாக வெளிப்படையாக எந்தஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநிலத்தில் ஆளும் மகா கூட்டணி (ஜக்கிய ஜனதா தளம் + ராஷ்டீரிய ஜனதா தளம் + காங்கிரஸ் )மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது எனவும் யூகிக்கப்பட்டு வருகிறது. தேஜஸ்வி பதவி விலக மாட்டார் என லாலுவின் கட்சி கூறிவிட்டது. இதற்கிடையே லாலு யாதவுடனான நிதிஷ் குமாரின் கூட்டணியானது பீகாரில் உடையும் புள்ளியில் நிற்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 
பீகார் அரசின் எதிர்க்காலத்தை தீர்மானம் செய்ய லாலு கட்சிக்கு நிதிஷ்குமார் 72 மணிநேர கால அவகாசம் அளித்து உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி சனிக்கிழமை மாலைக்குள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் குமார் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் லாலு குடும்பத்திற்கு எதிராக சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் விரிவான விளக்கத்தை வெளியிட வேண்டிய உடனடி தேவை உள்ளது என நிதிஷ் கட்சியை சேர்ந்த கேசி தியாகி பேசிஉள்ளார். நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளவர்கள், குற்றமற்றவர்கள் என திரும்ப வேண்டியது அவசியமானது, என கூறிவிட்டார் என தெரிகிறது.

ஊழலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்ற தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து எந்தஒரு மாற்றமும் செய்ய  முடியாது என நிதிஷ் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்