மறைந்த சஞ்சய் காந்தியின் மகள் என்று தன்னை அறிமுகப்படுத்திய பெண் டெல்லியில் பரபரப்பு
மறைந்த சஞ்சய் காந்தியின் மகள் என்று தன்னை பத்திரிகையாளர்களிடம் ஒரு பெண் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
‘இந்து சர்க்கார்’ படம்
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி 1980–ம் ஆண்டு ஒரு விமான விபத்தில் இறந்தார். இந்திரா காந்தியால் 1975–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை குறித்து ‘இந்து சர்க்கார்’ என்ற இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோரின் வாழ்க்கை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 28–ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் சஞ்சய் காந்தியின் வாழ்க்கை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதுபற்றி விளக்க பிரியா சிங் பால் என்ற 48 வயது பெண் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தந்தை சஞ்சய் காந்தி
நான் குழந்தையாக இருந்தபோது ஒரு குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டேன். வளர்ந்த பின்னர் என்னுடைய பெற்றோர் குறித்து கேட்டபோது, எனது தந்தை இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி என்று கூறப்பட்டது.
எனது அடையாளம் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். எனக்கு சொத்து, குடும்ப வாரிசுரிமை போன்ற இதர பலன்களில் எந்த ஆர்வமும் இல்லை.
டி.என்.ஏ. சோதனை
நான் ஏற்கனவே ‘சிசு பவன்’ மற்றும் ‘நிர்மல் சஹ்யா’ ஆகிய அமைப்புகள் மீது, விதிகளை மீறி எனது பெற்றோரை மறைத்து தத்து கொடுக்கப்பட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளேன்.
‘இந்து சர்க்கார்’ திரைப்படத்தில் எனது தந்தை சஞ்சய் காந்தியின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளனர். எனது தந்தை அந்த திரைப்படத்தில் கூறப்படுவதுபோன்ற நபர் அல்ல. இதன் காரணமாகவே நான் இதுவரை காத்துவந்த அமைதியை உடைத்திருக்கிறேன்.
எனது தந்தை சஞ்சய் காந்தி என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் நான் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சஞ்சயின் நண்பர்
அப்போது உடன் இருந்த 72 வயதான சுஷில் கோஸ்வாமி மகராஜ் என்பவர் தன்னை சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்துகொண்டார். சஞ்சய் காந்திக்கும், மேனகா காந்திக்கும் திருமணம் நடைபெறும் முன்பே சஞ்சய் காந்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது எனக்கு தெரியும். அவர் பிரியா சிங் பால் தான் என்றும் கோஸ்வாமி கூறினார்.
பிரியா சிங், ஏற்கனவே ‘இந்து சர்க்கார்’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், சினிமா தணிக்கை வாரிய தலைவர், தகவல் ஒலிபரப்பு மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த திரைப்படத்தில் தனது தந்தை சஞ்சய் காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கை சரியான முறையிலும், போதுமான வரலாற்று தகவல்கள் இல்லாமலும் காட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவரது பேட்டி அரசி]யல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.