காஷ்மீரில் மீண்டும் இணையதள சேவை துவங்கியது

பர்கான் வானி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதையொட்டி காஷ்மீரில் முடக்கி வைக்கப்பட்டு இருந்த இணையதள சேவை மீண்டும் துவங்கியது.

Update: 2017-07-09 05:18 GMT

ஸ்ரீநகர்,

ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி பர்ஹான் வானி கடந்த ஜூலை 8 ஆம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்த நிலையில், பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட ஓராண்டு நினைவு தினம் நேற்று முன் தினம் அனுசரிக்கப்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் டிரால் உள்ளிட்ட 3 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளம் மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்க தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றும் இணையதள சேவைகளை முடக்கி வைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், பர்ஹான் வானி நினைவு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் துண்டிக்கப்பட்டு இருந்த இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்