பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு
பர்ஹான் வானியின் நினைவு நாள், நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளதால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு,
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி பர்கான் வானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. வருகிற 8-ந்தேதி அவன் மரணமடைந்ததின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிறது.இதனால் காஷ்மீரில் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படலாம் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரையும் துவங்கியுள்ளதால், கூடுதலாக 21 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவப்படையினர் அங்குள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பர்கான் வானி கொல்லப்பட்ட நினைவு நாளில் பதட்டம் அதிகரிக்க கூடும் என்பதால், ஜூலை 6 ஆம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பர்கான்வானி நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தும் வகையில் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் அவரது ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக உள்ளூர் கவுன்சிலிடம் அனுமதியும் பெற்றிருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து இந்திய தூதரகம் இங்கிலாந்து அரசிடம் தனது ஆட்சேபனையை தெரிவித்தது. இதையடுத்து பர்கான்வானி ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்த வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.