ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2017-07-05 21:30 GMT

புதுடெல்லி,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அ.தி.மு.க. (அம்மா) வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார்.

அவர் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் சார்பில், வக்கீல் சிவபாலமுருகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருந்ததாவது:–

டி.டி.வி.தினகரன், 1994–95–ம் ஆண்டுகளில் அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம், 1972–ன் பிரிவுகள் 8, 9, மற்றும் 14 ஆகியவற்றை மீறும் வகையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி அன்னிய செலாவணியை பெற்றுள்ளார்.

சம்பந்தப்பட்ட நீதிமன்றம் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி 31 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கும் கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தடை விதியுங்கள்

இதுபோன்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும் என்று கூறுவது அன்னிய செலாவணி சட்டத்தின் நோக்கத்தை தோல்வி அடையச் செய்யும்.

இந்த வி‌ஷயத்தை கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தள்ளுபடி

இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், வக்கீல் சிவபாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், ‘தேர்தலில் நிற்பதற்கு தடை விதிப்பது குறித்த தெளிவான தீர்ப்பு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும், தண்டனைகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்