மேற்கு வங்காள கவர்னர், முதல்–மந்திரியுடன் ராஜ்நாத் சிங் டெலிபோனில் பேச்சு

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதிக்கும், முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

Update: 2017-07-05 20:49 GMT

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதிக்கும், முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி கூறிய மம்தா பானர்ஜி, தன்னை கவர்னர் அவமதிக்கும் வகையிலும், மிரட்டும் விதமாகவும் பேசியதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நேற்று டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு கவர்னர் கேசரிநாத் திரிபாதி மற்றும் முதல்–மந்திரி மம்தா பானர்ஜி இருவரிடமும் பேசினார். அப்போது இருவரும் தங்களது தரப்பிலான கருத்துகளை மத்திய மந்திரியிடம் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேசிய ராஜ்நாத் சிங், கருத்து வேறுபாடுகளை இருவரும் சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் வடக்கு 24 பர்கானா மாவட்ட வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கும்படியும், மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்கு வங்காள அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டு உள்ளது.

இதுபற்றி மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கவர்னர் மற்றும் முதல்–மந்திரியுடன் மத்திய உள்துறை மந்திரி தொடர்பு கொண்டு பேசியது, இயல்பாக ரகசியம் காக்கப்படவேண்டிய வி‌ஷயம். இதை வெளியிடவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது’’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்