எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி காஷ்மீர் சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காஷ்மீர் சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி வரியை கடந்த ஜூலை 1 ஆம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியது. பல்வேறு மாநிலங்களும் தங்களது சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றின. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்த போதும், சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்பதால் ஜம்மு காஷ்மீரில் ஜி.எஸ்.டி அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை சட்டசபை கூடியது. சபாநாயகர் கவிந்தர் குப்தா ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் அமளியில் ஈடுபட்டனர், ஜி.எஸ்.டி வரியால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என வாதம் செய்தனர். ஜி.எஸ்.டி தீர்மானத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு அஞ்சாமல், சபாநாயகர் கவிந்தர் குப்தா சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தேசிய மாநாட்டு கட்சி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் தீர்மானத்தை ஆதரித்தனர். இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் ஜி.எஸ்.டி தொடர்பான தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்த ஜி.எஸ்.டி தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப அம்மாநில கேபினட் பரிந்துரைக்கும். இதையடுத்து, தனியான அரசியலமைப்பு சாசன அதிகாரம் பெற்ற ஜம்மு காஷ்மீரில் ஜி.எஸ்.டி அமல்படுத்த ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார். ஜம்மு காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான தீர்மானம், மாநிலத்தில் தன்னாட்சி நிதியை அமைப்பை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.