ஜி.எஸ்.டி. வரிக்கு பிந்தைய மாற்றம் பற்றி மத்திய அரசு விளக்கம்
ஜி.எஸ்.டி. வரி அமலான நிலையில், பொருட்களின் விலை நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய, மாநில அரசுகள் வசூலித்து வரும் பல்வேறு வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த 30-ந் தேதி நள்ளிரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த புதிய வரி விதிப்பு முறையால், சில பொருட்களின் விலை உயர்ந்தது. சில பொருட்களின் விலை குறைந்தது. இதுபற்றி மத்திய அரசு, பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தியது.
இருப்பினும், வரி விதிப்புக்கு உட்படாத பொருட்களுக்கும், விலை குறைய வேண்டிய பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி என்ற பெயரில் அதிக தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் உருவானது.
ஆகவே, பொருட்களின் விலை நிலவரத்தை கண்காணிக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மேலும், ஏற்கனவே பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, இன்னும் விற்பனை செய்யப்படாத பொருட்களின் விலை குறைந்து இருந்தாலோ, அதிகரித்து இருந்தாலோ என்ன செய்வது என்ற கேள்வி, வர்த்தகர்கள் மத்தியில் எழுந்தது.
இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசு நேற்று விரிவான விளக்கம் அளித்தது. இதுபற்றி மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை சுமுகமாகவே சென்று கொண்டிருக்கிறது. இதன் அமலாக்கத்தில், ஒரு இடத்தில் கூட இடையூறு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இருப்பினும், பொருட்களின் விலை நிலவரத்தையும், அவற்றின் சப்ளையையும் மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதற்காக, மத்திய அரசின் மூத்த செயலாளர்கள் 15 பேர் அடங்கிய மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கூடி, ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்தை கண்காணிக்கும்.
இதுதவிர, மத்திய அரசின் இணை செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் அந்தஸ்திலான 201 அதிகாரிகள், மாவட்டவாரியாக கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். ஒவ்வொருவருக்கும் நான்கு, ஐந்து மாவட்டங்கள் ஒதுக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் 166 தொகுப்புகளாக பிரிக்கப்படும்.
அங்கு ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால், அதற்கு அந்த அதிகாரிகள் தீர்வு காண்பார்கள். வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்துள்ளார்களா?, கடைகளில் புதிய விலை எழுதி வைக்கப்பட்டுள்ளதா?, விளம்பரம் செய்யப்பட்டுள்ளதா? கடைகளில் உரிய ரசீது கொடுக்கப்படுகிறதா? என்றெல்லாம் அவர்கள் ஆய்வு செய்வார்கள்.
ஜி.எஸ்.டி. வரி அமலாக்கம் பற்றி நுகர்வோர் சங்கங்கள், தனிப்பட்ட நுகர்வோர்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களிடம் தினந்தோறும் கருத்து கேட்பார்கள். இப்பணிக்கு கால் சென்டர்கள், இணைய தளங் கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.
பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டால், அதுபற்றி மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் வருவாய்த்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிப்பார்கள்.
ஏற்கனவே பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, இன்னும் விற்பனை செய்யப்படாத பொருட்கள் விஷயத்தில், அதன் விலை உயர்ந்து இருந்தால், பழைய விலையையும், புதிய விலையையும் குறிப்பிட்டு, ஏதேனும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
பொருட்களை உற்பத்தி செய்பவரோ அல்லது இறக்குமதி செய்பவரோ இதைச் செய்ய வேண்டும். அத்துடன், அந்த பொருளின் பாக்கெட்டில் புதிய விலைக்கான ஸ்டிக் கரை ஒட்ட வேண்டும். ஸ்டிக் கர் ஒட்டுவதற்கு, செப்டம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, ஜி.எஸ்.டி. வரிக்கு பிறகு, விலை குறைந்த பொருட்களாக இருந்தால், பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டியது இல்லை. ஸ்டிக்கர் மட்டும் ஒட்டினால் போதும். விலை குறைந்ததன் பலனை நுகர்வோருக்கு கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
சிறு வியாபாரிகள், தாங்கள் விற்கும் பொருட்களுக்கு ரசீது வழங்க தேவையில்லை. அவர்கள் காம்போசிசன் திட்டத்தின் கீழ் வருவதால், நிர்ணயிக்கப்பட்ட வரியை செலுத்தினால் போதும்.
ஆண்டு விற்றுமுதல் ரூ.75 லட்சத்துக்கு மேல் கொண்ட பெரிய வர்த்தகர்கள் மட்டுமே ரசீது வழங்க வேண்டும். அதுவும், கம்ப்யூட்டர் ரசீதுதான் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உரிய விலைப்பட்டியல் எண்ணுடன், கையால் எழுதப்பட்ட ரசீதை அளித்தால் கூட போதும். ஆனால், கணக்கு தாக்கலின்போது, அதை கணக்கில் காட்ட வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரியில் சுங்க கட்டணம், மாநிலங்களில் வாகனங்கள் நுழைவதற்கான கட்டணம் ஆகியவை இணைக்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகளோ அல்லது மாநில அரசுகளோ தொடர்ந்து வசூலிக்கும்.
அதே சமயத்தில், வேறு மாநிலத்துக்குள் பொருட்களை கொண்டு செல்வதற்கான அனைத்து வரிகளும் ஜி.எஸ்.டி. வரியுடன் இணைக் கப்பட்டதால், இதற்காக 22 மாநிலங்களில் இருந்த சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி.யின் கீழ் வர்த்தகர்கள் பதிவு செய்து கொள்ளும் பணி கடந்த வாரம் தொடங்கியது. 2 லட்சம் புதிய பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 39 ஆயிரம் பதிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சத்துக்கு குறைவான வர்த்தகம் செய்பவர்கள், பதிவு செய்ய தேவையில்லை. மொத்த வியாபாரிகள் அல்லது உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு வரி வசூலித்துக்கொள்ளும் என்பதால், சிறு வியாபாரிகள் ஒவ்வொரு ரசீதையும் பத்திரமாக வைத்துக்கொள்ள தேவையில்லை.
இவ்வாறு வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கூறினார்.
மாவட்டம் தோறும் விலை நிலவரத்தை கண்காணிக்க 201 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி மத்திய அரசு தனியாக ஒரு அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில், 201 அதிகாரிகள் பட்டியல், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.