முந்தைய அரசின் ‘சைக்கிள்’ பாதைகளை தகர்க்க உ.பி. அரசு முடிவு
முந்தைய அகிலேஷ் யாதவ் அரசின் முக்கிய திட்டமான சைக்கிள் தனிப்பாதைகள் திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் அரசு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளது.
லக்னோ
உத்தர பிரதேசத்தின் அனைத்து பெரிய நகரங்களின் சாலைகளிலும் சைக்கிள் செலுத்த தனிப்பாதைகள் ஏபடுத்தப்பட்டன. இப்பாதைகளை மக்களிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான புகார்களை அடுத்து தகர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாக நகர்புற வளர்ச்சி அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்தார்.
சைக்கிள் தனிப்பாதை திட்டம் ரூ 500 கோடி செலவில் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டது. இதை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியிலிருந்து அமைத்தன. மாநிலத்தில் இரு நகரங்களுக்கு இடையிலான சைக்கிள் தனிப்பாதையை அகிலேஷ் யாதவ் 2016 ஆம் ஆண்டில் துவக்கி வைத்தார். எடாவா - ஆக்ரா இடையிலான இப்பாதை 207 கி.மீட்டர் தொலைவு ரூ. 134 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இதே போல கோமதி நதி சீரமைப்பு திட்டத்தையும் மூட யோகி அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டமும் அகிலேஷ்சின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
யோகி முடிவிற்கு அகிலேஷ் கண்டனம்
சமீபத்தில் ஹாலந்து பிரதமர் ருட்டே நமது பிரதமர் மோடிக்கு சைக்கிள் ஒன்றை பரிசளித்தார். இதைச் சுட்டிக்காட்டிய அகிலேஷ் யோகி அரசு சைக்கிள் பாதையை தகர்த்து சாதனை செய்கிறது. ஆக மத்திய அரசும் மாநில அரசும் முரண்பட்டு இரட்டை நிலையை கடைபிடிக்கின்றன என்றார்.